வியாழன், மார்ச் 28, 2024

என்னைத் தொலைத்தேன் - கவிதை



 

உறவின் பெயரால் அடிமை செய்தலை விட

தோழமையின் எல்லைக் கோட்டில் நிற்றலே என் காதல் 


மழையாய் உன்னைத் தழுவுவதை விட 

காற்றாய் நெஞ்சில் நிறைவது தான் என் அன்பு  


உன்னைக் கூட்டில் இருத்தி சிறைச் செய்தலை விட 

உந்தன் சிறகாய் மாறி உயரச் செலுத்துவதே என் பிரியம் 


உன் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கும் விரல்களை விட 

உன் வெற்றிப் பாடலை தினம் உதிர்க்கும் 

வார்த்தைகளிலேயே என் நேசம்  


என்னில் ஒரு பாதி இல்லை நீ 

பூஜியத்தின் முன்னின்று 

மதிப்புச் சேர்க்கும் மந்திரம் நீ 


சோகச் சிரிப்பொன்றை உதிர்த்தாய்

உனக்கும் காதல் பிறந்திருந்தால் 

என்னைத் தொலைத்து நம்மைக் கண்டிருப்பாய் 

அடிமையாய் வாழ்வதும் 

மழையாய் வீழ்வதும் 

கூட்டில் அடைவதும் 

கண்ணீரில் கரைவதும் 

பூஜியத்தில் முழுமை காண்பதும்

நாமிருவர் சார்ந்த முடிவு 

தனித்தே முடிவெடுத்தல் காதலில்லை 

என் பிரியத்தின் அடர்த்தி 

உனக்குள்ளும் தோன்றும் வரை 

எதிர்காலத்தின் கரையில் காத்திருப்பேன்


கண்ணில் பெருகிய கண்ணீர் 

மெல்ல என்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறது

வெள்ளி, மார்ச் 01, 2024

காலக் கண்ணி - கவிதை

Time


குறிப்பு: காலம் என்னும் நீண்டச் சங்கிலியில் நாம் ஒரு சிறிய கண்ணி என்ற எண்ணத்தில் எழுந்த கவிதை 


யாருமற்ற இருள் பொழுதில்
மெல்ல நடை பயில்கிறேன் 
மனதின் ஏக்கங்கள் 
தார்ச் சாலையைப் போல் நீள்கின்றன

எங்கும் புகும் காற்றைப் போல 
மனத்தின் சலனங்களை 
வானத்தின் மேல் வாரி இறைக்கிறேன்
உதிர்ந்த நட்சத்திரங்களைப் பொருக்கி
ஒவ்வொன்றாக ஞாபக ஓடையில் எறிகிறேன்
ஒவ்வொன்றும் ஏதோ ஒரு
கசப்பான அனுபவத்தை நினைவூட்டி
மனக்குளத்தில் அதிர்வலைகளை 
எழுப்பிச் செல்கிறது

அடர்ந்த கானகங்களை கடந்து விரைகிறேன் 
அதன் ஓசைகளும் அசைவுகளும்
மிரட்சித் தருவதாக இருந்தாலும்
அதன் கனவுகள் என்னுடன் ஒத்திருப்பதால் 
அவற்றுள் ஒன்றாகவே உணர்கிறேன் 
கூகைகளும் ஆந்தைகளும் கூவும்
ஓசைக் கேட்டும் மனம் கலங்கவில்லை 
மாறாக இருளில் மறையும் நிழலாய்
ஓசைக் காட்டில் சுயம் மீட்கின்றேன் 

வெளிச்சக் கதிர்களின் கிரணக் கைகள் 
மெல்ல என்னைத் தொடுகிறது
இருநாக்கு கொண்ட நாகமாய்
சுயம் களைந்து 
நகர முகம் அணிகிறேன்

போலியாய் சிரிக்கும் ஓநாய்களும்
மானுட உருவம் கொண்ட நரிகளும் 
உலவும் நகரக் காடு பரந்து கிடக்கிறது
இங்கே கனவுகளும் 
லட்சியங்களும் நுழைய அனுமதியில்லை 
சுதந்திரக் காற்றுக்கு சற்றுமிடமில்லை 
மனவிருப்பங்கள் தடைக்கு உட்பட்டவை 
இறக்கும் நாள்வரை வரிகட்டி
அரசாங்கம் முதல் இல்லாளன் வரை
எவருக்கும் தலையாட்டி வாழும் 
அடிமாட்டு வாழ்க்கை
வீதிதோறும் அதிகம் கிடைக்கிறது
கனவுகளை சேமிக்க
சுயத்தை பாதுகாக்க 
காதலிலும் சுதந்திரத்தை காக்க
எஞ்சிய நாட்களை சுயமரியாதையுடன் கழிக்க
வீதிகள் ஏதுமில்லை 
விதிகள் செய்யப்படவில்லை

மயானத்தை கடக்கிறேன்
காலடியில் சருகுகளாய் 
மிதிபடும் கனவுகள் கண்டு 
கண்ணீர்த் துளிர்த்தது
கனக்கும் துயரை 
நெஞ்சின் ஆழம்வரை 
செல்லும் காற்று 
வனமெங்கும் கொண்டு சேர்க்கிறது 
காலத்தால் அரியணை 
ஏற்றவியலாத் துயரை 
யாரும் கேட்டிராத ராகத்தில் 
காட்டு மூங்கில் மெலிதாய் 
இசைத்துக் கொண்டது 
என் சாயல் கொண்ட 
யுவதி ஒருத்தி
என் கனவுகளை 
வளையங்களாக்கி  
அணிந்து கொண்டாள் 

காலம் முட்கரங்களை 
முன்னகர்த்தி சலனமின்றிக்  
கடக்கிறது 
காலத்தின் தீராப் பக்கங்களில் 
கனவுக் கடத்தியாய் 
என் பணி நிறைவுற்று 
நகரத்தில் ஓர் அங்கமானேன் 

 


சனி, பிப்ரவரி 10, 2024

இயற்கையை கைவிடாதீர் !!




சொந்த நாட்டை காணச் சென்றேன் 
கார்ப்பரேட் உலகிலிருந்து
சற்றே விடைபெற்று 
வேலை இளமையைத் திருடி
கனவுகளை ஒத்தி வைக்கிறது 
முதுமைக்கான நோயினைச் சேர்க்கிறது 
சுயத்தை அழித்து
யாருடைய கனவிற்கோ 
உழைக்க வைக்கிறது 
அறிந்திருந்தும் கைவிடவியலாது
பொருளாதாரச் அடிமையாய் 
மண்புகழ் மாய்க்கும்  
மலினச் சலுகையாய்   
பெரு நிறுவனத்தின் சிறைக் கைதியாய்
நவீன உலகின் கொத்தடிமையாய் 

நிறமில்லா வானவில்லாய் 
தாய் மண் சிரித்தது
நெகிழிப் பைகள்
காலிக் குடுவைகள் புட்டிகள்
மக்காத குப்பைகள்
நிலத்தின் அவயம்
எங்கும் பூட்டப்பட்டிருந்தன 
நிலம் செரிக்காத மிச்சத்தை
நீரில் சேர்த்து
மக்கள் கவலையற்று இருந்தனர்

நல்லவேளையாய் விவசாய நிலங்கள்
ஆங்காங்கே பொலிவாய்த் தோன்றி 
குப்பை மலைகளை கண்டே 
சோர்வுற்ற கண்களுக்கு ஒளியூட்டின
நிலம் மனிதனுக்கு முதல் தாய்
மண்ணில் தோன்றி
மண்ணிலேயே முடியும் வாழ்வு
பிறப்பு முதல் இறப்பு வரை
நிலத்துடன் தொடரும் உறவு
வீழ்ச்சி கண்டிருப்பது
மனித மனதைச் சொல்கிறது
மனிதனின் முதல் உறவே
பட்டுப் போன பின்
என்ன மிச்சமுள்ளது
அக்கம் பக்கத்தினரோடு 
உறவைப் பேணாமல் போனதில்
ஆச்சரியம் இல்லை 
கோவில்களில் கூட்டம்
மதகுருமாரின் சாயல் கொண்ட 
சிலையைக் காண கூட்டம்
யானை வழித்தடங்களில் அமைந்த
ஆசிரமத்தில் மனித வெள்ளம்
செவ்வாடை உடுத்திய பக்தர்கள்
இருமுடி ஏந்திய பக்தர்கள்
அலையலையாய் அத்துணைக் கூட்டம்
ஆலயம் இறைவனின் வீடல்ல
மக்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள் 
ஆலயங்களில் உண்ட இடத்திலேயே 
போடப்படும் காலித் தட்டுகள் 
அருகிலேயே இருக்கும் குப்பை தொட்டிக்குள்
சேராத தண்ணீர்க் குவளைகள்
காலை இடறியதைவிட 
மனதை அதிகம் இடறியது
   
இன்னொரு மனிதனிடம் 
முயன்றே நேசம் கொள்ள வேண்டும்
ஆனால் இயற்கையுடனான நேசம் இயல்பானது
அதையும் உதறித் தள்ளும் மனிதக் குலம்
அழிவுப் பாதையில் வேகமாய் பயணிக்கிறது 
இயற்கையின் கோலத்தைக் காணச் சகியாமல்
கனத்த இதயத்துடன் திரும்பினேன்
குப்பை மலைகளைப் பார்த்துப் பார்த்து
மனமதையே  எதிர்ப்பார்க்க தொடங்கி விடுகிறது
இன்னும்.நாட்கள் போனால் 
அதுவே பழகி விடும் போல் தோன்றும் முன்பே
தாய்நாட்டில் இருந்து புறப்பட்டேன் 
அறிந்து தெளியுங்கள்  
இயற்கையை கைவிடும் மனிதர்களை
இறைவனும் கைவிடுவான்

வெள்ளி, ஜனவரி 19, 2024

தங்கத் தமிழன்


தனது 100-வது படத்தின் பெயரை உச்சரிக்கவே பல ஹீரோக்கள் யோசிப்பார்கள். ஏனெனில் அந்தப் படம் அப்படிப்பட்ட பயங்கரமானத் தோல்விப் படமாக அமைவது தான் தமிழ் சினிமா ஹீரோக்களின் தலையெழுத்தாக இருந்தது. 100-வது படம் வெற்றிப் படமாகவும் அமைந்து, அந்தப் படத்தின் பெயர், அடைமொழியாக நிஜப் பெயருடன் இணைந்து ஒருவரின் அடையாளமாக மாறும் அதிசயம் எல்லாம் ஒரு சிலருக்குத் தான் வாய்க்கும். அப்படிப்பட்ட அதிசயத்தை நிகழ்த்தியவர் நடிகர் விஜயகாந்த். 'கேப்டன்' என்ற தனிப்பெரும் அடையாளத்திற்குச் சொந்தக்காரர். "சாப்பிட்டீங்களா" என்பதைக் கேள்வியோடு மட்டும் நிறுத்தி விடாமல், இல்லை என்று பதில் வராத வண்ணம் தன்னை வந்து சந்திக்கும் அனைவருக்கும் உணவு வழங்கியவர். இப்போது விஜயகாந்த் பற்றி பல பேட்டிகளில் பல நடிகர்கள், பாடலாசிரியர்கள், டைரக்டர்கள் தாங்கள் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்தின் அலுவலகத்திற்கு சென்றால் கண்டிப்பாக உணவு கிடைக்கும் என்று கூறுவதைக் கேட்டு வருகிறோம். 

தனது ரசிகர் மன்றம் வாயிலாகவும், தனிப்பட்ட முறையிலும் இலவசத் திருமண உதவி, விஜயகாந்த் மருத்துவமனை வாயிலாக மருத்துவ உதவி, மகளிருக்கான உதவி எனப் பல உதவிகளைச் செய்துள்ளார். உதவி என்று யார் கேட்டாலும் "நான் இப்போது அதிக வேலைப்பளுவில் இருக்கிறேன், அப்பறம் பார்க்கலாம்" என்று ஒருபோதும் சொன்னதில்லை என்று அவரைப் பற்றி கமலஹாசன் சமீபத்தில் சொல்லி இருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் நான் என்னுடைய கடமையைத் தான் செய்தேன் இதில் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவு என்ன இருக்கிறது என்று விஜயகாந்த் எப்போதும் இதைப் பெரியதாக எண்ணியதில்லை.

தலைமை பண்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லில் காட்டாமல் செயலில் காட்டி விட்டுச் சென்றுள்ளார் கேப்டன் விஜயகாந்த். பிரச்சனைகளை நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லாமல் இன்றே அதைத் தீர்ப்பது என்ற முனைப்பு அவருடைய தனிப்பெருங் குணங்களில் ஒன்று. நடிகர் சங்கத் தலைவராக இருந்த போதும், அந்தப் பொறுப்பில் இல்லாத போதும், யாராவது அழைத்து, எனக்கு இந்தப் பிரச்சனை என்று சொன்னால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் ஒரு சுமூகமான முடிவினை எட்டாமல் ஓய மாட்டார் கேப்டன். "என்னுடைய மகள் மருத்துவராக இன்று இருப்பதற்கு விஜயகாந்த் தான் காரணம், அவர் மருத்துவர் ஆக முயற்சித்து தோல்வி அடைந்ததை தெரிந்து கொண்ட விஜயகாந்த் தானாகவே ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பேசி அவர் அந்த மருத்துவக் கல்லூரியில் சேர ஏற்பாடு செய்தார்" என்று இயக்குனர் கஸ்தூரிராஜா சமீபத்தில் அவரைப் பற்றிய இரங்கல் உரையில் தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

ஒரு பொறுப்பை எடுத்து விட்டால் அதை செம்மையாக செய்து முடிப்பது இன்றியமையாதது. நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடித்து சாயங்காலம் நடிகர் சங்கத்திற்கு வந்து ஒரு தலைவர் என்றால் அனைவரையும் சந்திக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

எளிமை என்பதை வார்த்தையாக இல்லாமல் நிஜமாகவே அதைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். எந்தவொரு ஈகோவும் பார்க்காமல் பொது விஷயத்திற்காக யாரையும் எந்த நேரத்திலும் சந்தித்து பேசுவது, நான் பெரிய நடிகர், என்னைத்தான் எல்லாரும் வந்து பார்க்க வேண்டும் என்று எண்ணாமல் ஒருவர் உச்ச நடிகரோ, சாதாரண மனிதரோ எப்படியானவராக இருந்தாலும் ஈகோ இல்லாமல் அனைவரையும் சென்று சந்தித்தது அவருடைய சிறந்த குணத்தில் ஒன்று. அவருடைய 18 படங்களை இயக்கிய திரு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்கள் "விஜயகாந்த் அவர்கள் உச்ச நடிகராக வளர்ந்த பின்னும் நான் சென்று அவரைப் பார்த்ததே இல்லை. நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்து கொண்டு அவரே தான் என்னை வந்து பார்ப்பார்" என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பண்பு திரைத்துறையில் மிகவும் அரிதான ஒன்று.

கடைசி வரை தமிழ்ப் படங்கள் அல்லாமல் வேறு எந்த மொழிப் படத்திலும் எந்த காரணத்திற்காகவும் நடித்ததே இல்லை. கொள்கை என்பதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட கொள்கைப்பிடிப்புடன் இருந்ததெல்லாம் அதிசயமே.

திரையின் முன் மட்டுமே நடித்தவர். நிஜத்தில் நடிக்காமல் வெள்ளந்தியான மனிதராகவே வாழ்ந்தார். பத்திரிக்கைகள் அவரைப் பற்றிய எழுதியதையோ அல்லது சக கலைஞர்கள் அவரைப் பற்றி தேர்தல் நேரத்தில் பேசியதையோ எந்த நேரத்திலும் விமர்சித்ததும் இல்லை, தன்னிலை விளக்கம் அளித்ததும் இல்லை. "காந்த்" என்று பெயர் வைத்துக்கொண்டால் இவர் பெரிய நடிகரா என்று இவரை ஒதுக்கிய நடிகைகளை எல்லாம் தான் வளர்ந்து பெரிய நடிகரான பிறகு ஒதுக்காமல் அவர்களுடனும் இணைந்து நடித்தார்.

அவருடைய தலைமைப் பண்பிலேயே மிகவும் உயரியது அவருடைய மனத்திண்மை தான். கலைஞர், ஜெயலலிதா என்று இரு வேறு ஆளுமைகள் இருந்த போதும் துணிந்து அரசியலில் இறங்கி எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தது எல்லாம் அவருடைய மனவுறுதிக்கு சிறந்த எடுத்துக்காட்டன்றி வேறென்ன. நிஜ வாழ்விலும் களத்தில் இறங்கி அவர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பாங்கு பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவர்களே சொல்லியிருக்கிறார். எந்த ஊராக இருந்தாலும், என்ன பிரச்சனை வந்தாலும் சக நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு அளித்து அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பும் துணிவு கொண்ட நடிகர் அவர் ஒருவரே. திமுக, அதிமுக என்று இரண்டு கட்சிகள் மக்களுக்கு நல்லது செய்யுமாயின் என்னுடைய கட்சியை கலைத்துவிடத் தயார் என்று பகிரங்கமாக சொன்னவர். உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட ஒருவருக்கே அந்த எண்ணம் வரும்.

நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்க நடிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மலேஷியாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தாமல், கேப்டன் விஜயகாந்தே ஒரு திரைப்படத்தில் நடித்து அந்தப் பணத்தை கொண்டு கடனை அடைத்திருக்க முடியாதா என்ன. ஆனால் நடிகர்கள் அனைவரையும் இந்தப் பணியில் இணைந்து அவர்கள் அனைவரிடமும் நடிகர் சங்கம் என்ற குழு மனப்பான்மையை வளர்த்த பெருமை கேப்டன் அவர்களையே சாரும்.

150 படங்கள் வரை நடித்திருக்கிறார். முழு சம்பளம் வாங்கிய படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அவர் வீட்டில் தயாரிப்பாளர்கள் அளித்தும், இன்னும் வங்கியில் போடப்படாமல் வைத்திருக்கும் காசோலைகள் பலவுண்டு என்று திரைத்துறையில் பலர் தெரிவித்து இருக்கிறார்கள். அவர் தூக்கி விட்ட நடிகர்கள் பலருண்டு. யாரையும் போட்டியாக எண்ணாமல் அனைவரும் வரட்டும் என்று இன்று முன்னணியில் உள்ள பல நடிகர்களுக்கு உதவிய நல்ல மனிதர். ஐம்பதுக்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்களை இயக்குனராக்கி அழகு பார்த்தது, திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு படவாய்ப்பு அளித்தது, தன்னுடன் இருந்த அனைவரும் வாழ வேண்டும் என்று தன்னைச் சுற்றி இருந்த பலரையும் தயாரிப்பாளர்களாக்கி அழகு பார்த்தவர். வடிவுக்கரசி அவர்கள் "அன்னை என் தெய்வம்" என்ற திரைப்படத்தை தயாரித்த போது யாரைக் கதாநாயகனாகப்  போடலாம் என்று விஜயகாந்த் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, "இப்போது நடிகர் மோகன் அவர்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே அவரைப் போடுங்கள்" என்று பரிந்துரை செய்தார். நான் பெரிய ஹீரோ என்னை போடுங்கள் என்றோ, என்னிடமே வந்து யாரை ஹீரோவாக போடலாம் என்று கேட்கிறீர்களே என்றெல்லாம் அவர் கேட்கவே இல்லை. எத்தனை பரந்த மனம் கொண்டவர் என்பதற்காக இந்த சம்பவத்தை குறிப்பிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். 



மதுரையில் இருந்து வந்து மிகவும் கடினமாக உழைத்து பல உயரங்களைத் தொட்டவர். எம்.ஜி.ஆர் அவர்களின் தயாள குணத்தைக் கண்டு, வாழ்ந்தால்  இப்படிப்பட்ட கொடையுள்ளத்துடன் வாழ வேண்டும் என்று உறுதி கொண்டவர். ஒரு உயரிய சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டு அதற்கு நம்மை ஒப்புக் கொடுத்தால் அந்த சிந்தாந்தமே நம்மை உயர்வான நிலைக்கு இட்டுச் சென்று விடும் என்பதை விஜயகாந்த் அவருடைய வாழ்க்கையும் , அவருடைய இறப்புக்கு கூடிய கூட்டமே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. "கருப்பு எம்.ஜி.ஆர்" என்ற பட்டப்பெயருக்கு முழு தகுதி பெற்றவர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

என்ற குறள் காட்டும் நெறியில் நின்று, வள்ளல் என்று மக்கள் போற்றும் ஒரு மாமனிதராக வாழ்ந்தவர். இன்றைய நவீன காலத்தில் இப்படிப்பட்ட மனிதரா என்று சொல்லும் அளவிற்கு அவருடைய சொல்லும் செயலும் என்றும் மாறுபடாமல் ஒன்றாகவே இருந்தது. "தப்பு பண்ணா மன்னிக்கணும், அது தான் பண்பு" என்று தன்னை விட்டுப் போன தன் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் கூட அவர் என்றும் குத்திக் காட்டியதில்லை.  இதற்கும் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களையும், தன்னுடன் இருபத்தைந்து, முப்பது வருடங்களளாக பயணித்தவர்களையும் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக அழகு பார்த்தவர். தான் வளர்த்தவர்கள் தன்னை உதறித் தள்ளி செல்கிறார்கள் என்ற கோபம் கூட இல்லாதவர். சில நேரங்களில் அவருடைய நேர்மையான கோபத்தை கூட அன்றைய காலத்தில் பத்திரிக்கைகள் எப்படி சித்தரித்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அதற்கு பிரயாசித்தமாகத் தான் இன்று சினிமாவில் ஏதோ ஒரு பணியில் இருப்பவரைக் கூட "விஜயகாந்த் எப்படிப்பட்ட நல்லவர் என்று சொல்லுங்களேன்" என்று   பத்திரிக்கைகளும் ,ஊடகங்களும் வலிந்து பேட்டி கண்டு ஒளிபரப்பி வருகின்றன. விஜயகாந்த் ஆட்சிக்கு வந்திருந்தால் இங்கே எல்லாமும் சரியாக நடந்திருக்கும் என்ற கோணமும் உண்டு.  ஆனால் வாழ்நாள் முழுவதும் அவரைச் சுற்றி இருந்த பலர் நம்மில் சிலர் தானே. ஒரு சின்ன உயர்விற்கே அகங்காரத்துடனும், சக மனிதனை மதிக்காத தன்மையுடனும், புகழ், பணம், அதிகார போதையில் அடுத்தவரை இம்சிக்கும் மனமும் கொண்ட மனிதர்கள் இருக்கும் வரை விஜயகாந்த் போன்ற நல்ல மனிதன் தலைவனாகி இருந்தாலும் தமிழகத்தின் தலையெழுத்து மாறுவதற்கு வழியில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

ஆனால் விஜயகாந்த் உண்மையிலேயே எல்லா விதமான  அச்சங்களையும்  கடந்தவர். சினிமாவில் காதல் காட்சிகளை விடவும், குடும்பக் காட்சிகளை விடவும், சண்டைக் காட்சிகளை மிகவும் விரும்புபவர் என்பார்கள். தன்னை நாடி வந்த மக்களுக்கு நல்லது செய்து எதையும் திரும்ப எதிர்பார்க்காதவர். தன்னை சுற்றி இருந்தவர்கள் உயர்த்திப் பார்த்தவர். துரோகம் செய்தவர்களை, தன்னை விட்டு விலகியவர்களை ஒரு போதும் குறை கூறாதவர். தன்னை பழித்தவர்களை என்றுமே அவர் பெரியதாகக் கருதியதே இல்லை. இதற்கு தனி துணிவு  வேண்டும். அத்தகைய துணிவும், நல்ல மனமும் கொண்ட ஒரு மனிதன் இன்று நம்மிடையே இல்லை என்ற துயரமே நமக்குப் பெரிய தண்டனை தான். அத்தகைய துணிவும், நல்லெண்ணமும் இந்த மண்ணில் தழைக்க வேண்டும். விஜயகாந்த் போல ஒரு நல்ல மனிதன் மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்று நமக்கு எழும் எண்ணமே அவருடைய செம்மாந்த வாழ்க்கைக்கு ஒரு சிறந்த சாட்சி.

போய் வாருங்கள் கேப்டன்!! வரலாறும், மண்ணும், இந்த மக்களும் என்றும்  உங்கள் பெயரை உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

வியாழன், ஜனவரி 18, 2024

உலகத் திருநாள் - கவிதை



மார்கழி கடிதாய் மறைந்து
தைமகள் பூத்தாள் மலர்ந்து
எழிலான கோலம் வரைந்து
ஏத்தி வரவேற்போம் விரைந்து
பழையன போக்கினால் போகி
உழவு பழமை உழைப்பு பழமை
பகிர்வது பழமை உயர்பண்புகள் பழமை
ஊக்கம் பழமை உயர்தமிழ் பழமை
கொள்வது பழசு கொடுமனம் பழசு
பகைப்பது பழசு பசிப்பிணி பழசு
வேற்றுமை பழசு வீண்பெருமை பழசு
பழையன விடுத்து பழமையை ஏற்போம்
பாரினில் தமிழ்க்குடி பெருமையைக் காப்போம்
நிலத்தில் விழும் நீர் நெல்லாய்
ஆவின் மடியில் தீம் பாலாய்
கார்வண்ணக் கரும்பில் பாகாய்
பலவாய்ப் பிரிந்தே தோன்றும்
இணைத்தால் புதுசுவைக் காட்டும்
பிறப்பிடம் எதுவென்றாலும்
உணர்வால் யாவரும் கேளிர்
சமத்துவம் உரத்தே பேசும்
தனிப்பெரும் நாளாம் பொங்கல்
தமிழர் திருநாள் அல்ல
உலகத் திருநாள் ஆகும்
கழனி செழிக்க உழைக்கும்
காளைக்கும் நன்றி சொன்னோம்
மாட்டுப் பொங்கல் கண்டோம்
மாசில்லா அன்பைத் தந்தோம்
உற்றோர் உறவினர் மூத்தோர்
இணைந்தால் காணும் பொங்கல்
அன்பால் இணைந்த இந்நாள்
வீரம் வளர்க்கும் நன்னாள்
வள்ளுவம் காட்டும் வாழ்வியல்
உள்ளுவோம் என்பதற்கு ஓர்நாள்
கள்ளுடைத் தீமைக் களைந்து
கடைத்தேறி பண்பட்டு உயர்வோம்
வள்ளுவர் அறத்தினை கொள்வோம்
வான்வரை நீள்புகழ் கொள்வோம்
மாரியும் கதிரும் இணைந்தால்
காடும் கழனியும் உயரும்
இயற்கை அன்னையைப் போற்றி
பொங்கலோ பொங்கல் என்போம்!

வியாழன், நவம்பர் 23, 2023

அருவி ஒரு பக்கக் கதைப் போட்டி




அருவி இலையுதிர் இதழ் சென்ற மாதம் வெளியானது. இது வரை ஓராண்டு கடந்து அருவியுடன் பயணித்து வருகிறேன். ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு சவால்கள்.குறிப்பாக, கொரோனா நோய் தொற்று காலத்தில் அருவி இதழ் வெளிவராத சூழல். ஆனால் நோய் தோற்று முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின் வந்த எங்கள் குழு அத்தனை காலம் முடங்கிக்  கிடந்த பேரவையின் அருவி இதழை மீண்டும் கொணர்ந்து பேரவையின் செய்திகளை தமிழ்ச் சங்கங்கள் பற்றிய செய்திகளை, இலக்கிய கட்டுரைகளை, அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் விருந்தாக தொடர்ந்து கொடுத்து வருகிறோம்.






இந்த பயணத்தின் ஒரு மைல்கல்லாக அருவி குறுங்கதைப் போட்டி ஒன்றினை அறிவித்து நடத்தி வருகிறது. இந்த போட்டியின் விதிகளை மேலே இணைத்துள்ள சுற்றோலையில் காணலாம். சுற்றோலையில் உள்ள QR கோட் வழியே கதையினை பதியலாம். சிறப்பான பணப் பரிசுகளும் காத்து இருக்கின்றன. போட்டி வட அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர்களுக்கு மட்டும். (யுஎஸ்ஏ, கனடா) .போட்டியில்  கலந்து கொண்டு வெற்றி பெற அனைவரையும் அழைக்கின்றேன்.


புதன், நவம்பர் 22, 2023

பட்டாம்பூச்சி வாழ்க்கை - கவிதை



என்னிடம் காசில்லா நாட்களில் 
காலியான பேருந்துகள் மட்டுமே 
நிறுத்தத்திற்கு வருகின்றது
கூட்டத்தில் தொலையும் 
வாய்ப்பினைத் தராமல் 

நேர்வழியைத் தவிர்த்து 
விரைவுப் பாதையில் 
செல்ல நேரும் போதெல்லாம் 
எவர் காலிலும் படாதமுட்கள் 
என் காலில் தைக்கிறது 

எப்படியேனும் அடுத்தவருக்கு
வெற்றிகரமாய் முடிந்து விடும்
காரியங்களில் ஒன்றிரண்டு கூட 
எத்தனை முயற்சி செய்தாலும்
ஒரு போதும் நிறைவேறுவதில்லை எனக்கு

இளைப்பாறல் இல்லா
நெடிய பயணங்கள் 
தொடர்த் தோல்விகள்
விழலாகும் முயற்சிகள்
நெகிழ்வற்ற வாழ்வில்
மூச்சு முட்டும் வரை சவால்கள்
வாழும் தகுதி இருப்பதை 
நொடி தோறும் மெய்ப்பித்தல் 
தீராதக் களைப்பைத் தருகிறது 

பிறப்பு முதல் இறப்பு வரை
விரும்பினாலும் விரும்பவிட்டாலும் 
பலவித அனுபவங்களில் தோய்த்து
அடிமையைப் போல இழுத்துச் செல்கிறது 

மலரில் அமரும் பட்டாம்பூச்சியாய் 
காற்றை அளவளாவும் இறகாய்
இருளில் உதிர்ந்த சருகாய் 
வாழ்வைக் கடத்தல் அசாத்தியமாகிறது
கைவராத வாழ்வின் மீதான
எதிர்பார்ப்பு தவறும் போதெல்லாம்
பிறரை எச்சரிக்கவென
இக்கவிதையை மட்டுமாவது
விட்டுச் செல்கிறேன்
அதை என்றாவது 
யாரேனும் வாசித்து
ஆறுதல் பெற 
கருணையோடு அனுமதிக்கூடும் 
இந்த வாழ்வு 


ஞாயிறு, அக்டோபர் 08, 2023

மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 90வது பிறந்த நாள் கொண்டாட்டம் இணைய வழியில் சென்ற வாரம் நடந்தது. அதற்காக நான் எழுதிய கவிதை கீழே. அய்யா அவர்களுக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்.






இளந்தென்றல் தழுவாத

இளவேனில் காலப் பகலாய்

இளமஞ்சள் வெய்யோனின் 

இன்முகங் காணா இரவாய்

இருவிழி இடைநின்ற முள்ளாய்

இமைப் பொழுதும் ஆறாத ரணமாய்

இளைக்கும் கறைப்பட்டு கலங்கும்

ஈரோட்டு இளங்கவியின் கவிகேளா நாளும்


கன்னலும் கனி சிந்தும் தேனும்

கனியமுதும் தெவிட்டாத பாலும்

குன்றும் நின்தமிழின் முன் குறையும்

மாற்றுப் பொன்னல்லோ 

வளையாத நின் எழுதுகோலும்


பல்லாயிரம் பொருண்மையில் கவிதீட்டி

பாரோர் வாழ நல்வழி காட்டி

அன்பிலா நெஞ்சுக்கும் அருள் கூட்டி

அணியணியாய் தமிழுக்கு அழகூட்டி

சென்ரியு, லிமரிக்கூவென

பல் வகைமை தந்தாய்

கவிஞருள் மேருவாய்

பலர் நெஞ்சில் நின்றாய்


தமிழன்பர் அகவையோ தொண்ணூறு

தமிழும்நீ வாழும்கவிதைநீ

உனக்கு மூப்பேது

சாகித்ய விருது 

உன்கை சேர்ந்தது அக்காலம்

உமது பெயரில் விருதுகள்

பெறுவது இக்காலம்


சென்னிமலையில் பிறந்தாய்

செந்தமிழின் மகவாய்

சின்னத்திரையில் ஒளிர்ந்தாய்

சீர்மிகு கவியாய் மிளிர்ந்தாய்

சமத்துவம் மலர உழைத்தாய்

சகத்தினை மாற்றி அமைத்தாய்

விருதுக்கு புகழ் சேர்த்த மாமணியே

பாவேந்தர் பாசறையில் மலர்ந்திட்ட ஒளிச்சுடரே


அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு

ஆழ்ந்த வாசிப்பு, தேர்ந்த உச்சரிப்பு

பரந்த நுண்ணறிவு

மேன்மையில் பணிவு

அருங்குணங்கள் பல கொண்டாய்

அவனியில் ஆன்ற புகழ் கண்டாய்


வள்ளுவனைப் பார்த்ததில்லை

வான்புகழ் கம்பனைக் கண்டதில்லை

பாரதியை அறிந்ததில்லை

பாரதிதாசனுடன் பழகியதில்லை

உன் அகம் கண்ட பின்னாளில்

இக்குறைகள் எழுவதில்லை


வாழிய வாழிய இன்னும் பல்லாண்டு

வளர்க வளர்க சீர்மிகு நின் தமிழ்த் தொண்டு

பொன்னான நின் அகவை நூறுக்கும்

பொலிவான என் வாழ்த்துக் கவி ஒலிக்கும்  



மௌனம் களைவோம் - கவிதை


கறுப்பின மனிதருக்கோர் சிறுமை

வெள்ளை அறிக்கை 

வீட்டின் கதவடைந்தாலும் 

நம்பிக்கை கொள்வதில்லை

நாளத்தில் குருதி தகிக்கவில்லை 


வெள்ளைப் பக்கங்களில்

கருமை பூசிய சொற்கள்

உண்மையை பேசின நாளும் 

தோட்டாக்கள் பேனாக்களை 

வஞ்சகமாய் வதம் செய்து 

பத்திரிக்கை தருமத்தை மாய்த்த போதும் 

நெஞ்சம் கலங்கவில்லை

கண்ணீர் துளிர்க்கவில்லை 


கலவர பூமியில்

இளமங்கையை மாய்த்த பேரை 

திலகமிட்டு மாலைச் சூட்டி 

வீரனென பாரினில் ஏத்தும் 

மடமை கண்டே நொந்து 

நீதியின் நீள்துயில் கலையவில்லை

பேதமெனும் நெருஞ்சியை பொசுக்கவில்லை 


வாய் பேசாக் குரங்கு

கண்களை மூடிய குரங்கு

காதுகளைப் பொத்திய குரங்கு 

மூன்று பொம்மைகள் எதற்கென 

ஒரே பொம்மையாய்ச் செய்தோம் 

அநீதிகண்டும் கேட்டும் வாயடைத்து 

சமூக ஊடகத்தில் தொலைந்து 

சகதியில் வீழ்ந்த மனிதம் 

சூழ்ந்த காரிருள் விலகவில்லை 

சமத்துவ உலகம் மலரவில்லை 


அநீதி தனக்கே நிகழும் வரை 

எதிர்ப்புக் குரல் ஒலிப்பதில்லை

உதவிக் கரம் நீளுவதில்லை 

துயில் கொள்வோரை எழுப்பலாம் 

நடிப்போரை எந்நாளும் எழுப்பவியலாது 

அகழ்வாரைத் தாங்கும் நிலமென்றாலும்

நெருப்புமிழும் எரிமலைகள் 

அடியினில் கனன்று கொண்டிருக்கும்

புவியிடம் பாடம் படிப்போம் 

மௌனம் சம்மதமல்ல 

புதுவெள்ளம் கரைக்குள் நிறைவதல்ல 

அச்சமெனும் முள்ளில் சிக்கி

அடிமையாய்க் கோழையாய் 

முகமின்றி வாழ்வது தொலைத்து 

ரௌத்திரம் பழகுவோம்

வீழ்ந்தாலும் ஆங்கொருவர் 

வாழ்வதற்கென்றே மாற்றுவோம்

கள்ளிக் காட்டில் மறைத்தாலும் 

காடழிக்கும் தீப்பொறியாய்த் தோன்றுவோம் 

உப்புக்கடல் சேர்ந்தாலும் 

ஒற்றைத் தேன்துளியாய் ஆகுவோம்!!



வெள்ளி, ஆகஸ்ட் 11, 2023

கவியும் இயற்கையும் - கவிதை

 


வெண்மேகம் திரட்டி 

செந்தேனில் தோய்த்து 

இளமஞ்சள் கதிரால் வாட்டி 

இயற்கை இட்ட தேனப்பமோ?

வானமகள் உடுத்திக் களைந்த  

வண்ணச் சேலையோ?

நீல வயல்களில் 

தங்கக் கிரணங்களை இறக்கி 

இளைப்பாறிய பின் அணியும் 

வெய்யோனின் மோன வித்தையா?

அறியேன் யான் 

என் பணி  

கால நதிக்கரையில் அமர்ந்து 

இயற்கை பேரெழில் மைத் தொட்டு 

கவிதை வரைவது மட்டுமே 

இயற்கை மட்டும் 

மற்றுமோர் கவிதையாய்  மாற 

புதிய வண்ணங்களைச்  

சிந்தித்துக் கொண்டிருக்கிறது  






புதன், ஜூலை 19, 2023

கதை கேட்கலாம் கதை பேசலாம்

 


சென்ற வார இறுதியில் எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி திரு பவா செல்லதுரை மற்றும் திருமிகு கே.வி. ஷைலஜா பங்குபெற்ற இலக்கிய நிகழ்வு நடைபெற்றது. சார்லட் தமிழ்ச் சங்கம் மற்றும் அதில் ஒரு அங்கமாகிய சார்லட் இலக்கிய வட்டம் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் இருவரும் பங்கேற்று சிறப்பித்தனர். அவர்கள் இருவரின் உரைகளும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களை கட்டிப் போட்டிருந்தது. பவா அவர்களின் எதிர் வரும் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினோம். நிகழ்ச்சியில் இருந்து சில புகைப்படங்கள் கீழே. வலையொளியில் நேரலையில் வந்த இணைப்பும் இங்கே உள்ளது.





இலக்கிய வாசிப்பு/புத்தக வாசிப்பு என்பது நுட்பமான ஒரு இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட காலப்(Gallup) ஆய்வின் படி அமெரிக்கர்கள் ஆண்டுக்கு சராசரியாக 12.6 புத்தகங்களை வாசிக்கிறார்கள். இது 2001 முதல் 2016 வரை இருந்ததை விட 2 முதல் 3 புத்தகங்கள் வரை குறைவான எண்ணிக்கை ஆகும்.




கதைகள் கேட்டு வளர்ந்த குழந்தைகள் கூட இன்று சமூக ஊடங்களில் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தேடிக் கேட்க/பார்க்க முடியும் என்ற நிலையில், வாசிப்பு என்பது தேய்ந்து "செல்வத்தில் செல்வம் செவிச் செல்வம்" என்ற அளவிலேயே நின்று விட்டதோ என்று தோன்றுகிறது. கதை சொல்லிகள் இலக்கிய உலகின் துரித உணவு பரிமாறுபவர்கள் எனலாம். கதைகளைப் படித்து அவர்கள் விரும்பும் பாத்திரங்களை அவர்களுக்கு எட்டிய கருத்துக்களை நமக்கு அறியத் தருகிறார்கள். அறியாத எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்கிறார்கள், புதிய கோணத்தில் ஒன்றை நமக்கு அறியத் தருகிறார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனோடு கூடவே நடந்து ரகசிய நிலவறைக்கு செல்லும் தருணத்தை நீங்கள் மட்டுமே வாசித்து உணர முடியும், வேள்பாரியில் நீலன் கூடவே பறம்பு மலையில் நடக்கும் சுகத்தை நீங்கள் மட்டுமே கற்பனை செய்ய முடியும். வாசிப்பு அனுபவத்தை பகிரலாம், ஆனால் வாசிப்பையே பிறரிடம் விட்டுவிட்டு சென்று கொண்டிருக்கிறோமோ என்ற கேள்வி எழுகிறது. மதுரையில் புதிய நூலகம் திறக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி. ஆனால் நூலகம் என்பது இருட்டிய பின் யாருமே செல்லாத இடமாக மாறக் கூடாது. வாசிப்பை சுவாசிப்போம் என்பதை விட வாசிப்பைக் காப்போம் என்பதே இன்றைய தேவையாகி இருக்கிறது.








செவ்வாய், ஜூன் 13, 2023

நினைவுகளில் வாழ்கிறாய் நீ - கவிதை

 



மெல்லிய மழைச்சாரல் கட்டவிழ்க்கும் மண்வாசம்

மின்னல் கீற்றெனவே உன் நினைவூட்டும் கார்காலம் 

பின்னிரவின் மௌனம் கலைக்கும் மெல்லிய இசை கானம்

மென்மையாய் தான் வருடும் உன் நினைவினை கிளறும்


காதல் ஒரு மாயவலை நீரின் மேல் எழுத்தென்றேன்  

இதில் விழுந்தவர் பலருண்டு எழுந்ததில்லை எவருமென்றேன்

அழகான பணம் படைத்த  பெண்துணை தேடும் ஆணுக்கு

பகுதிநேர இன்பமென்பேன் கேளிக்கை மட்டுமென்பேன்

 

அழகிய சுருள்முடி, ஆறடி உயரம், மனதிற்கினிய புன்சிரிப்பு 

மேகம் கடந்து பின்தோன்றும் ஆதவன் போல் முகவனப்பு 

இருசக்கர வாகனத்தை ஆகாய விமானம் போல 

லாவகமாய் ஓட்டி செல்வாய் தேவலோக கந்தர்வன் போல

 

அழகான முகமல்ல அன்பைக் கொட்டும் மனம் கேட்டேன்

அன்பிலோர் சிகரமென்றாய்  உன் பயணத்தில் பங்குகொண்டேன்

உலகையே வீழ்த்தியதாய் இறுமாந்து மமதைக் கொண்டேன்

உன்உறுதியான தோள் பற்றி இமயத்தை விஞ்சி நின்றேன்  

 

அழகான ஆபத்து என்பதெல்லாம் அறிந்திருந்தும்

கண்ணுள்ள குருடனாய் ஆக்கியது இந்த காதலடா      

கருணை ஏதுமின்றி பிரிவு என்ற பெருஞ்சோகம் 

இயல்பாய் நீ கொடுத்தாய் விதியென்று நொந்தேனடா

 

உலகத்தை வெறுத்திருந்தேன் உறங்காமல் நிலைகுலைந்தேன்

வேறு பாதையில் வாழ்க்கைத் தள்ள தயங்கினேன் தவிதவித்தேன்

கடவுள் போடும் முடிச்சு எல்லாம் புரியாத விளையாட்டென்பேன்

பழைய முகமூடி தொலைத்து புதிய முகமூடி அணிந்தேன்

 

தூக்கம் தொலைத்த பின்னிரவில் அணைக்க உன் கை

களைத்த ஒரு மாலை நேரம் புதிதாக்க உன் புன்னகை 

உலகத்தையே காலில் சேர்க்கும் எனக்கான குறும்புப் பார்வை

தொலைந்தும் வாழப் பழகிக் கொண்டேன் விந்தை விந்தை    

 

உடைந்த சிறு இதயம் தைத்து புதியபல உறவை கோர்த்தேன்

முதுகில் தைத்த துரோகம் துடைத்து யதார்த்தம் என்ற பார்வை கொண்டேன்

நிழற்படத்தை தூக்கி வீசி இதுவும் கடக்கும் என்றிருந்தேன்     

என் நினைவடுக்கில் உந்தன் முகம் அழித்துவிடும் வித்தை சொல்லேன்

பொய்மையும் வாய்மை இடத்து - சிறுகதை



சுதா காரை ஓட்டியவாறே அருகில் இருந்த வரைபடத்தை பார்த்தாள். இன்னும் நூறு மைல் தொலைவு இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மணி நேரம் இன்னும் செல்ல வேண்டும். பிட்சுபர்க், பென்சில்வேனியாவில் உள்ள பெருமாள் கோவில் தான் அவள் இலக்கு. சுதாவுக்கு வயது இருபத்தி ஐந்து  ஆகிறது. பார்க்க அழகாக இருந்தாள்.  நல்ல நிறம். நடுத்தர உயரம். நவநாகரீக உடையோ, புடவையோ இரண்டுமே அவளுக்குப் பொருத்தமாக இருக்கும். அவள் அமெரிக்கா வந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. பொறியியல் மேற்படிப்பிற்காக யுனிவர்சிட்டி ஆப் லூயிவில் வந்தவள், படிப்பை முடித்து விட்டு ஓரிரு வருடங்களாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான ஹெச்1பி விசாவும் வாங்கி விட்டாயிற்று. கார் முன்னோக்கி போய்க் கொண்டிருந்தது, சுதாவின் நினைவுகளோ பின்னோக்கிப் போனது. ஐந்து வருடங்களுக்கு முன், செப்டம்பர் முதல் வாரத்தில், அவள் முதன்முதலாக  அமெரிக்கா வந்த போது, அவளுடைய அறைத் தோழிகளாக இருந்த மது மற்றும் பிரியங்காவின் நினைவு வந்தது. 

மது பீகாரில் இருந்து வந்திருந்தாள். வேதியியலில் முனைவர் பட்டப்படிப்பிற்காக அவளும், சுதா படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்திருந்தாள். வெளியூரில் இருந்து வரும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு கிடைக்கும் வரை, சீனியர் மாணவர்களின்  வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது. அந்த ஏற்பாட்டினால், ஒரே சீனியர் மாணவி வீட்டில் தங்கியிருந்த மதுவும், சுதாவும்  இணைந்து வாடகைக்கு வீடு பிடிக்கலாம் என்று பல இடங்களில் அலைந்து திரிந்த போதும், கல்லூரிக்கு அருகில் வீடு கிடைப்பது கடினமாக இருந்தது. ஒரு நாள், அதே கல்லூரியில், கணினி பொறியியல் துறையில் படிக்கும்  பிரியங்காவின் அறிமுகம் கிடைத்தது. அவள் கல்லூரிக்கு அருகிலேயே நடந்து செல்லும் தூரத்தில் வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்திருந்தாள். அறையை பகிர்ந்து கொள்ள ஆட்களை தேடிக் கொண்டிருந்த போது மதுவும், சுதாவும் வீடு தேடுவதை அறிந்து தன்னுடன்  தங்கச் சம்மதமாயிருந்தால் வரச் சொன்னாள். சுதாவிற்கும், மதுவுக்கும் வீட்டை விட, வீட்டின் வாடகை அதிகம்  பிடித்திருந்தது. ஒரு ஹால், ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் குளியலறை கொண்ட அந்த வீடு இருவர் மட்டும் தங்க சரியாக  இருந்திருக்கும். மூன்று பேருக்கு கொஞ்சம் இடப் பற்றாக்குறை தான். ஆனால், வேறு வழி இல்லை. பனிக் காலத்தில் அதிக தூரம் நடந்து செல்ல முடியாது.விரைவாக நடந்து  செல்லக் கூடிய வகையில் கல்லூரிக்கு அருகிலேயே இருந்ததால் மதுவும், சுதாவும் பிரியங்காவுடனேயே வீட்டைப் பகிர்ந்து கொள்ள இசைவு தெரிவித்தார்கள். 

பிரியங்கா, அந்த வீட்டில் இருந்த ஒரு படுக்கையறையை ஏற்கனவே தனதாக்கிக் கொண்டதால், மதுவும் சுதாவும் வீட்டின் உள்ளே நுழைந்ததுமே இருந்த ஹாலைப் பகிர்ந்து கொண்டார்கள். எனினும், தூங்கும் நேரம், உணவு உண்ணும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் கல்லூரி, ஆய்வுக்கூடம், திட்டப்பணி, வீட்டுப்பாட வேலை போன்ற பலப் பணிகள் இருந்ததால் வீடு என்பது அதிக நேரம் செலவழிக்க வேண்டிய ஒரு இடமாக இருக்கவில்லை.  ஒரு சில மாதங்களில், அனைவரும் நன்கு பழகிய பிறகு இப்படியாக தங்கி இருப்பது கூட வசதியாக இருந்தது. இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு  மதுவும், சுதாவும் ஏதேனும் கதை பேசத் தொடங்கினால், பிரியங்கா அவளுடைய அறையில் இருந்தாலும், வெளியில் மது மற்றும்  சுதாவின் பேச்சு சத்தம் கேட்டு அவர்களுடன் இணைந்து கொள்வாள். பிரியங்கா ஹாலில் உள்ள சோபாவில் படுத்துக் கொண்டு அவர்கள் இருவருடனும் இரவு மூன்று நான்கு மணி வரை கதை பேசிக் கொண்டிருப்பாள்.

வியாழன், வெள்ளிக் கிழமை என்றால் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு அருகில் நிறைய ஆண்கள் அல்லது நிறைய பெண்கள் மட்டுமே தங்கியிருக்கும் பிரடெர்னிட்டி மற்றும் சொரரிட்டி வீடுகளில் கேளிக்கை கொண்டாட்டங்கள் விடிய விடிய நடக்கும். பெரும்பாலும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த, இளங்கலை படிக்கும் அமெரிக்க மாணவர்களே இந்தக் குழுக்களில் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேற்படிப்பில் இருக்கும் மாணவர்கள் இதை எல்லாம் கடந்து வந்தவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் சிலர் வேலைப் பார்த்துக் கொண்டே படிப்பவர்கள் என்பதால், இதே போன்று விடிய விடிய நடக்கும் பார்ட்டிக்களில் கலந்து கொள்ள அவர்ளுக்கு நேரம் இருக்காது. சுதாவும், மதுவும், பிரியங்காவும் இந்தப் பார்ட்டிகளில் நடக்கும் விஷயங்களைப் பற்றி பேசுவார்கள். பேச்சு அப்படியே தங்கள் வகுப்பில் இருக்கும் ஆண்கள்,பெண்கள் பற்றித் திரும்பும். அவரவர்களுக்கு பிடித்த ஆண்கள் யார் யார் என்று திடீரென்று பேச்சு மாறும். கொஞ்ச நேரம், ஒருவரை ஒருவர் கேலி செய்வார்கள். பேச்சு குடும்பம், காதல், படிப்பு, வேலை என்று பல தளங்களுக்குத் தாவி இரவு வெகு நேரம் வரை நீளும்.

வார இறுதியில் வரும் இரவு நேரங்களில், அதே வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள அறைகளில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் சிலர் குடித்து விட்டு, வெளியில் இருந்த சுவற்றில் அமர்ந்து கொண்டு, தாங்கள் காதலித்த பெண்ணை அல்லது தன்னை விட்டுச் சென்ற பெண்ணைப் பற்றி  ஹிந்தியில் புலம்புவார்கள். போதையில் புலம்பும் நபர் உரக்கச் சொல்வது மதுவுக்கும், சுதாவிற்கும், பிரியங்காவிற்கும் கேட்கும். "ஆண்களால் மட்டும் இப்படி எல்லாம் சொல்ல முடிகிறது, குடித்துவிட்டு அழ முடிகிறது, புலம்ப முடிகிறது. இந்தியப் பெண்கள் காதலிப்பதைக் கூட வெளியில் சொல்ல முடியாது. காதல் தோல்வி பற்றி வெளிப்படையாக பேசுவது எல்லாம் மிகவும் கடினம்" என்பாள் பிரியங்கா. 

பிரியங்காவிற்கு நேர்ந்த காதல் தோல்வியைப் பற்றி மதுவுக்கும், சுதாவிற்கும் தெரியும் என்பதால் அவர்கள் மௌனமாக அவள் சொல்வதை ஆமோதிப்பார்கள். "வேறு ஏதாவது பேசுவோம்" என்று மது அந்த பேச்சிற்கு அணை போடுவாள். ஏனென்றால் பிரியங்காவின் காதல் கதையை பேசினால் அதன் பின் பல நாட்கள் மனச்சோர்வுடன் இருப்பாள். அவள் இயல்பு நிலை திரும்ப சில வாரங்கள் கூட ஆகும். மதுவுக்கும்,சுதாவிற்கும் அவளுடைய இந்த நிலையைப் பார்க்க பாவமாக இருக்கும்.  "காதல் எல்லாம் வயசுக் கோளாறு" என்பாள் மது. அப்போது அவளும், அவளுடன் படித்த ஒருவரைக் காதலித்துக் கொண்டிருந்தாள். சுதா அவள் சொல்வதைக் கேட்டுச் சிரிப்பாள். 

"என்னையும்  சேர்த்தே தான் சொல்கிறேன்" என்பாள் மது நகைத்தவாறே.

முதுகலை படிப்பு முடிய சுதாவிற்கும், பிரியங்காவிற்கும் இன்னும் ஓரிரு மாதங்களே இருந்தன. முனைவர் பட்டப்  படிப்பு என்பதால் மதுவுக்கு படிப்பு முடிவடைய கிட்டத்தட்ட இன்னும் ஐந்து வருடங்கள் அல்லது ஆறு வருடங்கள் இருந்தது. சுதாவிற்கும், பிரியங்காவிற்கும் வேலைக்கான அழைப்புகள் வரத் தொடங்கியது. அந்த வீட்டில் இருந்தது ஒரே ஒரு தொலைபேசி மட்டுமே. அதுவும்  கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்பு  கட்டப்பட்ட வீடு என்பதால், தொலைபேசி இணைப்பு அடிக்கடி பழுதாகி விடும். பிரியங்கா பசைப்பட்டை எல்லாம் போட்டு தொலைபேசி ஒயரை ஒட்டி வைத்திருந்தாள். தொலைபேசி இலாக்காவில் யாரையேனும் அழைத்து அதை சரி செய்வதற்கு எவ்வளவு டாலர்கள் செலவு செய்ய நேருமோ என்ற எண்ணத்தில் அனைவரும் தொலைபேசியை அப்படியே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். சுதா ஒரு நாள் இணைப்பு சரியில்லை என்று அந்த தொலைபேசி ஒயரை சரி செய்த போது, மொத்தமாக அந்த தொலைபேசி வேலை செய்வதையே நிறுத்தி விட்டது. வீட்டிற்கு வந்ததும் அதை அறிந்த பிரியங்கா அப்படியே வெடித்தாள்.

"சுதா, நீ ஏன் இதைத் தொட்டே? தொலைபேசியை வேலை செய்ய வைப்பதே  கஷ்டமா இருக்கு.  இதுலே ஏதோ வேலை செஞ்சிட்டு வந்த இந்த தொலைபேசியையும் நீ வீணாக்கிட்டே" 

"இல்லை பிரியங்கா, அதுலே நிறைய சத்தம் வந்து பேசறதே சுத்தமா கேட்கலை. அதனால கொஞ்சம் சரி பண்ணலாம்னு பார்த்தேன். இப்போ என்னடான்னா சுத்தமா டயல் டோன் கூட வரலை. நாம் யாரையாவது கூப்பிட்டு சரி பண்ணுவோம். ஒரு ரெண்டு மூணு நாளுல எப்படியும் சரியாகிடும்."

"ரெண்டு, மூணு நாளா? அது வரைக்கும் எனக்கு ஏதாவது கம்பெனியில் இருந்து  வேலைக்கான அழைப்பு ஏதாவது வந்தா என்ன ஆகும்?. நான் இந்த எண்ணைத் தான் தொடர்பு எண்ணாகக் கொடுத்திருக்கேன்."

"சரி, சரி கோபிக்காதே. நான் நாளைக்கே தொலைபேசி நிறுவனத்தில் கூப்பிட்டு சொல்றேன். எப்படியும் விரைவா வந்து சரி பண்ணிடுவாங்க."

"நீ எப்போ வேணா சரி பண்ணு, சரி பண்ணாதே. எனக்கு ஒரு அழைப்பு வந்து, வேலை கிடைக்கக் கூடாதுன்னு நினைச்ச உன்னோட எண்ணத்தை தெரிஞ்சிக்கிற வாய்ப்பா  இது அமைஞ்சது. அதற்கு கடவுளுக்கு நன்றி" என்று ஆங்கிலத்தில் பொரிந்தவள், தன்னுடைய அறைக்கு கோபத்துடன்  சென்றுவிட்டாள்   

சுதா அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை, அதுவும் பிரியங்கவிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை. அதன் பிறகு ஓரிரு மாதத்தில் பிரியங்காவிற்கு டெக்சாசில் வேலை கிடைத்து அவள் அங்கு சென்று விட்டாள். சுதாவுக்கும் வேலை கிடைத்து, அவளும் அந்தப் பணியில் இணைந்திருந்தாள். கிட்டத்தட்ட அந்த ஒரு நிகழ்விற்கு பின் சுதா மற்றும் பிரியங்காவின் நட்பு அறுந்து போனது என்றே சொல்லலாம். சுதாவால் முன்பு போல பிரியங்கவிடம் நட்பு பாராட்ட முடியவில்லை. எப்போதாவது பிரியங்கா அழைத்தால் கூட அந்த அழைப்புகள் பரஸ்பர நல  விசாரிப்புகளுடன் நின்று போகும்.

மதுவும் அடிக்கடி ஆராய்ச்சி அல்லது மாநாடு என்று மாதக்கணக்கில் கனடா சென்று விடுவாள். இதனால் சுதாவுக்குத் தான் கொஞ்சம் கடினமாக இருந்தது. பேச்சுத் துணைக்கு கூட ஆள் கிடைத்து விடும். ஆனால் ஒரு விஷயத்தை நன்றாக ஆலோசித்து,  நேர்மையான ஒரு கருத்தை முன்வைக்கும் தோழி இல்லாது  போனது அவளுக்கு கடினமாகவே இருந்தது. கீழ்த் தளத்தில் சில புதிய மாணவர்கள், மாணவிகள் குடியேற்றி இருந்தார்கள்.  எனவே அலுவலக வேலைக்கு சென்று வந்த பின் எப்போதாவது அவர்களுடன் பேசுவாள். 

சுதாவின் அப்பா ஒவ்வொரு முறையும் அவளை இந்தியாவில் இருந்து அழைக்கும் போது  கேட்பார் "என்னம்மா சுதா, வயசு ஆகிட்டே போகுது. நீயோ உனக்கு யாரையும் பிடிக்கலேன்னு சொல்றே. அம்மாவும் அப்பாவும் உனக்கு கால காலத்துல ஒரு கல்யாணம் செய்து பார்க்கணும்னு நெனைக்கறோம். உனக்கு ஆட்சேபனை இல்லன்னா நல்ல வரன் எல்லாம் வருது. நீ பாக்கறியா" என்பார்.

"அப்பா, எனக்கு யாரையும் இப்போ பார்க்க வேண்டாம்" என்று ஓரிரு வருடங்களாக தட்டிக் கழித்துக் கொண்டே வந்தாள். சுதாவுக்கு அவளுடன் படித்த கணேஷைப் பிடித்திருந்தது. கணேஷிற்கும் இவளை பிடித்திருப்பதாக தோன்றியது. ஆனாலும் அவன் இவளிடம் அது குறித்து ஒன்றும் சொன்னதில்லை. படிப்பு, பொருளாதார நிலை, வேலை ஆகிய அனைத்தும் சமமாக இருந்தாலும் அவனுடைய தயக்கத்திற்கான காரணம் என்ன என்பது அவளுக்குப்  புரிபடவில்லை. ஜாடைமாடையாக ஒரு முறை கேட்ட போது "எனக்கு எங்க வீட்ல பாக்குற பொண்ணு தான். என்ன தான் நான் அமெரிக்காவில் இருந்தாலும் இன்னும் ஊர்ல இருக்கற எந்தக்  கட்டுப்பாட்டையையும் என்னால கடந்து வெளியில் வர முடியாது." என்றான் தன்னுடைய  எண்ணத்தை விளக்கும் தொனியில். அவனுடைய குடும்ப சூழ்நிலை, பெற்றோர்களின் மனநிலை இவற்றை உணர்ந்து தவிர்க்கிறான் என்று புரிந்து சுதாவும் அதைப் பற்றி பேசவில்லை.  ஆனாலும் கிடைக்காது என்பது தெரிந்த பின் ஒருவரின் மீது அதிகரிக்கும் ஈர்ப்பு என்பது பிரபஞ்சம் என் மீது நடத்தும் யுத்தம் என்று எண்ணிக் கொள்வாள் சுதா.  அவனை பார்த்தால் ஏதேனும் வீணான நம்பிக்கை வளரலாம் என்று முடிந்த வரை அவனைத் தவிர்த்து வந்தாள். எப்போதாவது பார்த்தாலும் மெலிதான ஒரு புன்முறுவலுடன் கடந்து சென்று விடுவாள். அவள் சென்று மறையும் வரை ஒரு ஜோடிக்கு கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவே அவளுக்குத் தோன்றும்.

சுதாவின் அப்பாவின் வற்புறுத்தலுக்கு பின், நான்கு மாதம் முன்பு தான் "சரி அப்பா, நீங்கள்  சொன்ன வரனைச் சென்று பார்க்கிறேன்" என்று ஒப்புக் கொண்டாள் சுதா.  பிட்சுபர்க்கில் உள்ள பெருமாள் கோவில் சுதா ஊரில் இருந்தும், குமார் என்ற பெயருடைய அந்தப் பையனின் ஊரில் இருந்தும்,  சம தூரத்தில் இருப்பதால், பிட்சுபர்க் பெருமாள் கோவிலிலேயே இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ளலாம் என்று முடிவாயிற்று. 

குமார் பார்ப்பதற்கு நன்றாக இருந்தான். அவனும் அமெரிக்காவிலேயே மேற்படிப்பு படித்து முடித்து தற்போது வேலையில் இருக்கிறான்.  கொஞ்ச நேரம், இருவரும், தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்கள். பெரிய உயர்ரக லெக்சசு காரில் வந்திருந்தான். 

"இந்தக் கார் எனக்கு சொந்தமானது இல்லை. லெக்சசு கார் கம்பெனியில் வேலை செய்வதால் காரைத் தேவைப்படும் போது தொலைதூர பயணத்திற்கு எடுத்திட்டு வரலாம். என் கிட்ட ஒரு பழைய ஹோண்டா அக்கார்ட் இருக்கு.  அதைத் தான் நான் வழக்கமா பயன்படுத்துவேன். " 

தேநீர் குடிக்க இருவரும் அருகில் இருந்த ஒரு கடைக்கு சென்ற போது "எனக்குத்  தேவையான தேநீரும், சிற்றுண்டியும் வாங்கிக் கொள்கிறேன். உனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வா. வெளியே இருக்கிறேன்" என்றான். சுதாவுக்கு தேநீர் வாங்கிய பிறகு விடை பெறும் வரை என்ன பேசினார்கள் என்பது எதுவும் மனதில் நிற்கவில்லை.  "என்ன ஒரு நாலைந்து டாலர் ஆகியிருக்குமா?"  அதைக் கூட செலவு செய்யத் தயங்கும் ஒரு ஆணுடன் எப்படி இருக்க முடியும் என்று தோன்றியது. அல்லது தன்னைப் பிடிக்கவில்லை என்பதால் செலவு செய்ய விருப்பப்படவில்லையோ என்றும் நினைத்தாள். 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல திரும்பி வரும் போதே அவளுடைய வீட்டிற்கு போன் செய்து "எனக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணலை" என்றாள். அவள் நினைத்த மாதிரியே, குமாரின் வீட்டில் இருந்து, சுதாவுடைய தந்தையை அழைத்து தங்கள் மகனுக்கும் இந்தச் சம்பந்தத்தில் விருப்பம் இல்லை என்ற செய்தியைத்  தெரிவித்தார் குமாரின் தந்தை. 

வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக, இந்த வரன் தட்டிப் போனதோ என்று கூட சுதாவுக்கு தோன்றியது. கணேஷின் முகம் அவள் மனக்கண்ணில் ஒரு கணம் தோன்றி மறைந்தது.  சில நேரங்களில் சில வாசல்கள் அடைபட்ட வாசல்களா அல்லது தட்டினால் திறக்கக் கூடிய வாசல்களா என்று  தெரிந்தால் வாழ்க்கை எத்தனை சுலபமாக இருக்கும் என்று எண்ணி பெருமூச்சு விட்டாள். அலுவலக வேலை, வீடு, சமையல், மளிகைக் கடை எப்போதாவது துணிக் கடை என்று பழக்கப்பட்ட வாழ்க்கைக்குள் தன்னை ஆழ்த்திக் கொண்டாள். எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும், மறுதலிப்பு கூட  சில நேரங்களில் சுமையாகி விடுகிறது. மனதை இலகுவாக்க, அவ்வப்போது அருகில் உள்ள நூலகம் சென்று புத்தகம் வாசித்தாள். அருகில் இருந்த ஒரு உடற்பயிற்சி நிலையத்திலும் இணைந்து கொண்டு உடற்பயிற்சி செய்வது, அருகில் இருந்த பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு செல்வது  என புதிய வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். 

இரண்டு மாதம் முன்பு, மீண்டும் அப்பாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. "நியூஜெர்சியில் ஒரு பையன்  இருக்கிறான் அந்தப் பையன் வந்து உன்னை பார்ப்பான். உனக்குச் சம்மதமா?" 

'ஏன் அப்பா, அந்தப் பையன் இங்கு அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து படித்த பையன் என்று சொல்கிறீர்கள். நான் முழுதும் இந்தியாவில் வளர்ந்த பெண். அவனுக்கும் எனக்கும் ஒத்து வருமா? வேற ஏதாவது பார்க்கலாம்"  என்று முதலில் சுதா மறுத்தாள்.

"அந்தப் பையனே உன்னை வந்து பாக்கறேன்னு சொல்றாரு. நீ போய் பேசிப் பாரு. எது முடியும்னு யாருக்குத் தெரியும். எல்லாமே ஒரு வாய்ப்பு தானே." என்று அப்பா கூறவே, மனதில் எழுந்த மறுப்பினை அடக்கி ஒப்புதல் தெரிவித்தாள்.

வாசு, அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பையன் என்பதை அவனுடைய தோற்றத்தில் இருந்து அறிய முடியவில்லை என்றாலும், அவன் பேசும் போது அதை அறிய முடிந்தது. ஆங்கிலம் அவனுடைய நாவில் விளையாடியது. வாயில் சூயிங்கத்தை வைத்துக் கொண்டு பேசினால் எப்படி ஒரு மிழற்றல் இருக்குமோ, அது போல அவனுடைய பேச்சிலும் ஒரு கொழகொழப்பு தன்மை இருப்பதாக சுதாவுக்கு தோன்றியது. அவளுடைய ஆங்கிலம் அந்த அளவு  நேர்த்தியானது இல்லை.  வாசுவுடைய எண்ணங்கள், எதிர்பார்ப்பு என்று எதையும் அவனுடன் பேசிப் பார்த்த பின்பும், சுதாவுக்கு ஒரு தெளிவு இல்லாதது போலவே தோன்றியது. அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் அமெரிக்க இந்திய இளைஞர்கள் அமெரிக்கராக இல்லாமலும் இந்தியர்களாகவும் இல்லாமல் குழப்பத்திலேயே வாழ்பவர்கள் என்ற பொதுவான ஒரு கருத்திற்கு, வாசு சரியான உதாரணம் என்று அவளுக்குத் தோன்றியது. அவனுக்கும் சுதாவுடன் ஒத்து வருமா என்ற சந்தேகம் இருந்தது போலும். பட்டும் படாமலும் பேசினான். ஒரு உணவகத்தில் இரவு உணவிற்கு சந்தித்தார்கள்.  பருகுவதற்காக ஸ்பார்க்ளிங் வாட்டரும், இரவு உணவிற்கு இறைச்சி உணவையும் தேர்ந்தெடுத்தான். போன மாதம் சந்தித்த குமார் போல உணவிற்கான கட்டணத்தை நீயே செலுத்து என்று கூறுபவனாகத் தெரியவில்லை என்றாலும், சுதாவுக்கு இந்த சந்திப்பு நேர்மறையாக முடியும் என்பதில் எந்தவித நம்பிக்கையும் இல்லை  என்பதால் மெனுவில் இருந்த மிகவும் விலைகுறைந்த சாலட்டை தேர்ந்தெடுத்தாள். ஏதேதோ பேசியபடி சாப்பிட்டு விட்டு விடை பெற்றுக் கொண்டார்கள். வாசு, இவள் பணம் தருவதாகக் கூறியும், அதை மறுத்து இருவரின் உணவிற்கான தொகையையும் செலுத்தினான். அவன் விடைபெற்று சென்ற பிறகு,  அவன் வீட்டில் இருந்து யாரும் அழைத்து, சுதாவின் அப்பாவிடம்  பேசவில்லை என்பது மட்டும் சுதாவின் தந்தைக்கு பெருங்குறையாக இருந்தது. "ஒரு மரியாதைக்காவது கூப்பிட்டு வேண்டாம்ணு சொல்லியிருக்கணும்.  பெண்கள், ஆண்கள் அளவு சமத்துவம் அடைந்ததாக கூறும் அனைவரையும் கல்யாணச் சந்தையில் நிறுத்தினால் தான் தெரியும், உண்மையான நிலவரம்" என்று அங்கலாய்த்தார் சுதாவின் அப்பா.   "என்  உணவிற்கான தொகையை நானே அளித்திருக்கலாம்" என்பது மட்டுமே சுதாவுக்கு குறையாக இருந்தது. 

அந்த வார இறுதியில் சுதா தொலைபேசியில் கனடாவிலிருந்த மதுவை அழைத்து புலம்பினாள்.

"மது, இது பெரிய இம்சையா இருக்கு. போற வரவங்களுக்கு எல்லாம் என்னைப் பத்தி சொல்ற மாதிரி ஒரு சித்ரவதைக்கு ஈடா எதுவுமே இல்லைன்னு சொல்லலாம். இதுல நான் எது சொன்னாலும், சொன்னது உண்மையா, பொய்யான்னு  கண்டுபிடிக்கறேன்னு பையனோட அப்பா அம்மாக்கிட்டே இருந்து தொலைபேசி அழைப்பு வேற. ஒவ்வொரு நாளும், ஊர்லேர்ந்து எங்க அப்பா என்னைக் கூப்பிட்டாலே இன்னைக்கு எந்த ஊர்ல  என் வழக்கு  விசாரணைக்கு வரப் போகுதோன்னு படபடன்னு இருக்கு. பெருமாள் கோவிலுக்கு திருமணம் அமையப் போவார்கள். நான் பிட்சுபர்க் போகறது, திருமணம் நடக்காம இருக்கறதுக்கே போகிற மாதிரியே இருக்கு. பெருமாளுக்கு இருக்கற கல்யாண யோகம் என்னால குறைஞ்சிடும் போல இருக்கு."

"இங்க பாரு சுதா, இதையெல்லாம் நீ சுலபமா எடுத்துக்கோ. இந்த மாப்பிள்ளை பார்க்கற படலம் எல்லாம் எவ்வளவு நாள் நடக்கப் போகுது? கொஞ்சம் நாள் தான். வாழ்க்கையிலே இதெல்லாம் ஒரு காலகட்டம் அப்படின்னு எடுத்துக்கோ." என்று அவளுக்கு பலவாறு சமாதானம் சொன்னாள் மது. 

எனினும் அன்றிரவு  தூக்கம் வர, அவளுக்கு நிறைய நேரம் பிடித்தது.

மூன்றாவது முறையாக, இப்பொழுது  மீண்டும் பிட்ஸ்பர்க் பயணம். இந்த பையனின் பெயர் கார்த்திக். கார்த்திக்கோ, வாசுவோ, குமாரோ ஒவ்வொரு முறையும் என்னைப்   பற்றிய பல விடயங்களை, திரும்பவும் சந்திக்கப்  போகிறேனோ இல்லையோ என்று தெரியாத ஒருவருடன் அவருடனான முதல் சந்திப்பிலேயே பகிர்ந்து கொள்வது கூட கசப்பாகவே இருக்கிறது என்று நினைத்தவாறே காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள் சுதா. ஏற்கனவே பல முறை வந்ததால்,வரைப்படத்தை பார்க்க வேண்டிய தேவை இல்லாமலேயே  கோவிலை எளிதாக அடைந்தாள். கார் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள். காலணிகள் விடும் அறையில் நிறைய பென்ச் போடப்பட்டிருந்தது. அதில் உட்கார்ந்து காலணிகளை கழற்றி அங்கிருந்த அலமாரியில் வைத்தாள். உள்ளே சென்று பெருமாளை தரிசித்து பிரகாரத்தைச் சுற்றி வந்தாள். சரியாக 1:00 மணி அளவில் முன்னதாகவே கூறியபடி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள பூங்காவில் வந்து அமர்ந்தாள். சரியாக பத்து நிமிடங்களில் கார்த்திக் வந்து சேர்ந்தான்.  வந்தவுடன் தாமதாக வந்ததற்காக மன்னிப்பு கோரினான்.  

மாநிறம். ஐந்தேமுக்கால் அடி உயரம் என்று அவனுடைய பயோடேட்டா சொல்லியது துல்லியமாய் இருந்தது. கலகலவென்று பேசினான். தன்னைப் பற்றி எந்த விவரத்தையும் தயக்கம் இல்லாமல் பகிர்ந்து கொண்டான். அவளைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டான். 

"நான் காதலிச்சிருக்கேன், ஆனா இப்போ இல்லை. இப்போ வாழ்க்கையை காதலிக்கறேன். எனக்கு வரப் போற மனைவியை மட்டுமே காதலிக்க போறேன்.  உன்னால நான் இருக்கற ஊர்ல வேலை தேடிட்டு வர முடிஞ்சா வா. இல்லை என்னால வர முடியுமான்னு நான் முயற்சி பண்றேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கும் என்னை பிடிச்சிருக்கான்னு யோசிச்சு சொல்லு." என்று சிறிது நேரத்திலேயே தன்னையுடைய மனதில் பட்டவற்றை ஒளிவு மறைவின்றி தெரிவித்தான்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் விடைப்பெற்றுக் கொண்டு  அவரவர் ஊருக்குத் கிளம்பினார்கள்.

சுதா அப்பாவை அழைத்தாள். "அப்பா, கார்த்திக் பேசிப் பார்த்த வரைக்கும் நல்ல பையன் மாதிரி தான் இருக்கான். ஆனா, முன்னாடியே பெண் தோழிகள்  இருந்ததுன்னு சொன்னான். ரொம்ப வேகமா இருக்கான். என்னை இப்போ தான் முதல் முதல்ல பாக்கறான். அதுக்குள்ள என்னை பிடிச்சிருக்குன்னு சொல்றான். கொஞ்சம் யோசிக்கணும்." 

"சரிம்மா, நானும் பேசிப் பார்க்கறேன். அம்மாவையும் பேசச் சொல்றேன்."

சுதாவுக்குத் கொலம்பஸ்  திரும்பும் போதே இரவாகி விட்டிருந்தது.  கையோடு வாங்கி வந்திருந்த பழங்களை உண்டு விட்டுப் படுத்தாள்.

அடுத்த நாள் ஞாயிறு. வழக்கம் போல  கொஞ்சம் தாமதமாக படுக்கையை விட்டு எழுந்து அவசரமாக சமையலை முடித்தாள். கொஞ்சம் மளிகை சாமான் வாங்க வேண்டிய வேலை இருந்தது. வால்மார்ட் சென்று வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வந்தாள். கொஞ்ச நேரம் ஓய்விற்கு பின், புதிதாக வாங்கி இருந்த மயில் நிறத்தில் இறுகக் கவ்வும் எலாஸ்டிக் நீளக் கால் சட்டையும், அதற்கு பொருத்தமான பச்சை வண்ண சட்டையும் அணிந்து கொண்டு, அருகில் இருந்த பூங்காவில் நடைப்பயிற்சிக்குச்  சென்றாள். காரை விட்டு இறங்கும் போது அருகில் இருந்த காரைப் பார்த்தவுடன் இது கணேஷின் வண்டியாயிற்றே என்று யோசித்தவாறே நடந்தாள். முகப்பில் எங்கும் கணேஷ் தென்படவில்லை. சரி, சுற்றி வரும் போது பார்க்கலாம் என்று மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.  கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு மர பெஞ்சில் அருகருகே அமர்ந்து கணேஷும் இன்னொரு அமெரிக்கப் பெண்ணும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர்கள் இருவரும் அன்யோன்யமாக, ஒருவர் தோளில் மற்றொருவரும் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் சென்ற பின் இருவரும் கையைப் கோர்த்துக் கொண்டு, காரில் ஏறிக் கிளம்பிச் சென்று விட்டனர்.  

சுதாவுக்கு விழியோரங்களில் கண்ணீர் அரும்பியது. வாய்மையின் இடத்தை பொய்மையின் வெற்றுச் சொற்களை இட்டு நிரப்ப முடியாது. உண்மையின் நாக்குகள் தரும் வெப்பம் தாள முடியாததாய் இருந்தாலும் அவை பொய்மையின் குளிர்ந்த கரங்களை விட சிறந்த ஆறுதல் தரக் கூடியவை. கணேஷிற்கு வேறு யாரையோ பிடித்திருக்கிறது என்பதை அவன் நேரடியாகவே சொல்லி இருக்கலாம். இதற்கு எதற்குப் பொய் சொன்னான் என்று யோசித்த போது அவளுக்கு தோன்றியது ஒன்று. ஒரு வேளை அவன் நினைத்த பெண் அமையவில்லை என்றால், கேட்க ஏதுவாக, கையருகில் தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.  கணேஷ், அவள் அறைத் தோழி பிரியங்கா, குமார், வாசு எல்லாரும் முகமூடிகளுடன்  வலம் வருபவர்கள்.  முகமூடி அணிந்த மனிதர்களுடன் இருந்ததாலேயே இவளுக்கு உண்மைக்கும் பொய்மைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. 



சுதா ஒரு தெளிவான முடிவிற்கு வந்திருந்தாள். அப்பாவை அழைத்தாள். "அப்பா, எனக்கும் கார்த்திக்கை பிடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்யலாம். என் அனுபவத்தில் நிறைய பேர் தங்களுடைய உண்மையான முகத்தை காட்டாமலேயே முகமூடிகளுடன் நடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் உண்மை முகம்  எப்படியும் வெளிப்பட்டு விடுகிறது. கார்த்திக் மத்தவங்க மாதிரி இல்லாம மனசுல பட்டதை என்னுடைய முடிவு என்னவாக இருக்கும்னு தெரியறதுக்கு முன்னாடியே சொல்லிட்டார். அவரோட மனசை மறைச்சு இது நடக்குமா நடக்காதா, நடந்த பிறகு சொல்லலாமா அப்படின்னு எந்த கணக்கும் இல்லை. கார்த்திக்கை இவ்வளவு பேருக்கு அப்பறம் சந்திச்சதுல ஒரு நன்மை என்னன்னா அவர் உண்மை சொல்றாரா இல்லையான்னு என்னால இப்போ நல்லா உணர முடியுது. சரியான ஆளை  அடையாளம் காட்டவே  என்னை பெருமாள் இத்தனை தடவை பிட்சுபர்க் கூப்பிட்டிருக்காருன்னு புரியுது." என்று சொல்லி நிறைவுடன் அலைபேசியை அணைத்தாள்.

அநேகமாக சுதாவின் அடுத்த பிட்சுபர்க் பயணம் நன்றி தெரிவிப்பதற்காய் தான் இருக்கும்.

                                                                    முற்றும்